30/10/2017:சென்னையில் அதிகாலை முதல் வடகிழக்கு பருவமழை: சாலைகளில் வெள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி!
சென்னையில் அதிகாலை முதல் வடகிழக்கு பருவமழை: சாலைகளில் வெள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி!
சென்னைக்கு தென்மேற்கு மண்டலத்தில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு வளிமண்டல சூழற்சியானது, அங்கிருந்து நகர்ந்து இலங்கை கடற்கரைக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை புறநகரில் இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி அதிகாலை முதலே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், பல்லாவரம், தாம்பரம், பட்டினம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட நகரின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மழைநீர் சாலைகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வாகனங்களில் பள்ளி,கல்லூரி செல்பவர்களும், அலுவலகம் செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.