தமிழகம் முழுவதும் இன்று மழை எப்படி?- தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு

தமிழகம் முழுவதும் இன்று மழை எப்படி?- தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு

படம் உதவி: தமிழ்நாடு வெதர்மேனின் ஃபேஸ்புக் பதிவு

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஒக்கி புயலால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 1-ம் தேதி) மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் கணித்துக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்(https://www.facebook.com/tamilnaduweatherman/) கூறியிருப்பதாவது:

ஒக்கி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது.  தூத்துக்குடி, நெல்லையிலும் ஒரு முறை மழை வெளுத்துவாங்கும். அதன் பின்னர் இந்த மூன்று மாவட்டங்களிலுமே மழை படிப்படியாக குறையும். அநேகமாக இன்று பகலில் இந்த மூன்று மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை திண்டுக்கல், தேனியில் நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது. தேனியில் பெரியார் பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

பாபநாசம், மணிமுத்தாறு, கொடையாறு, மாஞ்சோலை பகுதிகளில் மிகமிக கனமழை பெய்யலாம்.

ஒக்கி புயல் லட்சத்தீவுகள் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் வேறொரு திசை நோக்கி நகர்வதால் காரைக்கால், கடலூர் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கிறது. திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

சென்னைக்கு மழை எப்படி?

சென்னையில் விரைவில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்யும். சில நேரங்களில் வெயில்கூட அடிக்கலாம். காற்றின் நகர்வைப் பொருத்தே மழை வாய்ப்பு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.