தமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

rains-7

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும்,  புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக காலையில் வெப்பம் விரட்டி வந்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், தியாகராய நகர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை,  தி.நகர், ராயப்பேட்டை, மந்தைவெளி, போரூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், கொளத்தூரிலும் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ஐந்து நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் முதல் கனழை பெய்து வருகிறது.

தமிழகத்தில், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, தஞ்சாவூர், வேலூர், காஞ்சிபுரம், திருள்ளூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ளும் படியும் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மடுகரை, வில்லியனூர், மதகடிகப்பட்டு, தவளகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7-ஆம் தேதி வரை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6-ஆம் தேதி வரை கேரளத்தின் பல்வேறு மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.