சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன: மழைகாரணமாக மெட்ரோ ரயில் பணிகள் பாதிப்பு

04/11/2017 : சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன: மழைகாரணமாக மெட்ரோ ரயில் பணிகள் பாதிப்பு

வடகிழக்கு பருவ மழை துவங்கியதை அடுத்து சென்னை மற்றும் புறநகரில் பெய்துவரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக மெட்ரோ ரயில் பணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

டெல்டா பகுதியில் இருந்து மிகப்பெரிய மழை மேகம் நகர்ந்து சென்னை நோக்கி வருவதால் மழை நீடிக்கும், தென்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீடிக்கும் என கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவில் மற்றும் அதிகாலையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் சில இடங்களில் மட்டும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. தாம்பரம், பல்லாவரம், கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் தூறல் மழை பெய்தது.

மழையால் சென்னை அண்ணா சாலை மற்றும் பெரிய மேட்டில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ சுரங்கப் பாதையில் மழைநீர் புகுந்து தேங்கியுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பணிகள் எதுவும் நடக்கவில்லை, மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீரை அகற்றிய பின்னரே பணிகள் தொடர்ந்து நடக்க வாய்ப்புள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் மேலும் நீர்வரத்து அதிகம் உள்ளே வர வாய்ப்பு உள்ளதால் மெட்ரோ ரயில் பணிகள் இயல்பு நிலைக்கு திரும்ப நாளாகலாம்.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் புறநகர் மின்சார ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் மிகக்குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் காலை பணிக்கு செல்வது தாமதமாகி வருகிறது.

சென்னையில் மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. மழை சற்று குறைந்து காணப்படுவதால் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாகவும், சனிக்கிழமை எனபதாலும் பயணிகள் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. புழல் ஏரி 882 கனஅடியாகவும், சோழவரம் ஏரி 301 கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரி 891 கனஅடியாகவும், பூண்டி ஏரி 400 கனஅடியாகவும் தற்போது உள்ளது.

கனமழை காரணமாக கடலூர் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. அதன் கொள்ளளவான 47.5 அடியில் இதுவரை 44.64 அடியை எட்டியுள்ளது. வடவார் வாய்க்கால் வழியாக ஏரிக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லாததால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. வீராணம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிக அளவாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் மழை நீடிப்பதோடு, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனாலும் மிதமான மழை நீடிக்கும்.