சமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

சமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

nobel

போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும்  பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடியமைக்காக, சமூக ஆர்வலர்களான காங்கோ நாட்டு மருத்துவர் டெனிஸ் முக்வேஜேவுக்கும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த யாஜிதி இனப் பெண் நாடியா முராடுக்கும் 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வெள்ளிக்கிழமை அறிவித்து, நோபல் தேர்வுக் குழு தலைவர் பெரிட் ரீஸ்-ஆண்டர்ஸன் கூறியதாவது:

உலகம் முழுவதும், போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒரு போர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அவலத்துக்கு முடிவு கட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வரும், மருத்துவர் முக்வேஜேவுக்கும், நாடியா முராடுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

எந்தச் சூழலிலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டால்தான், உலகில் உண்மையான அமைதியை எட்ட முடியும் என்றார் அவர்.

பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக நிகழாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெனிஸ் முக்வேஜே (63)

மருத்துவப் பட்டம் பெற்றுள்ள முக்வேஜே, பெண்களுக்கான சிறப்பு மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர். கடந்த 1998 முதல் 2003-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 2-ஆவது காங்கோ போரின்போது கிளர்ச்சிப் படையினரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளித்தவர் இவர்.

நாடியா முராட் (25)

இராக்கில், யாஜிதி இனத்தவர் வசிக்கும் சிஞ்சார் மலைப்பகுதியை கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றுகையிட்டபோது, பயங்கரவாதிகளால் நாடியா கடத்தப்பட்டார். அதன் பிறகு 3 மாதங்கள் அவர்களிடம் பாலியல் அடிமையாக இருந்த அவர், பிறகு அவர்களிடமிருந்து தப்பி வந்து பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது பணிகளால் ஈர்க்கப்பட்ட ஐ.நா. போதைப் பொருள்கள் மற்றும் குற்றப் பிரிவு (யுஎன்ஓடிசி), நாடியாவை பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்லெண்ணத் தூதராக 2016-ஆம் ஆண்டு நியமித்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது போராட்டம் குறித்து நாடியா எழுதிய “தி லாஸ்ட் கேர்ள்’ என்ற புத்தகம் 2017-ஆம் ஆண்டு வெளியானது.