இன்று மழை நிலவரம் என்ன?: Tamilnadu Weather Man Report
04/11/2017 : இன்று மழை நிலவரம் என்ன?: Tamilnadu Weather Man Report
வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து தொடர்ந்து சென்னையில் கனமழை அல்லது விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் இன்றும் டெல்டா பகுதியிலிருந்து வரும் மேகக்கூட்டத்தால் மழை இருக்கும் ஆனால் அது கனமழையாக இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய மழை நிலவரம் குறித்து காலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் செய்த பதிவு:
வடகிழக்கு பருவமழை குறித்த முக்கிய அறிவிப்பு. நான் முந்தைய பதிவில் கூறியிருந்ததைப் போல், டெல்டா பகுதியில் இருந்து மிகப்பெரிய மேகக்கூட்டம், சென்னை அருகே வந்துவிட்டது.
கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர், தென் சென்னையில் இந்த மேகக்கூட்டங்கள் மூலம், நமக்கு நல்ல மழை கிடைக்கும். இந்த வார இறுதி நமக்கு சூப்பர் பருவமழையாக இருக்கப்போகிறது. சென்னை முழுவதும் கன மழை இல்லாமல், சாரல் மழையுடன் இருக்கும்.
இந்த மழை தென்சென்னை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சென்னையிலும் பெய்யும் அளவுக்கு பரவாலாக இருக்கும். அதேசமயம், அடர்த்தியான மேகக்கூட்டங்கள் ராடரில் தெரியும் பட்சத்தில் அதன் மூலம், வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.
மற்றவகையில் சென்னையில் மிதமான அல்லது சாரல் மழையுடன் இந்த வார இறுதி நமக்கு இருக்கும். அடுக்கடுக்கான மேகக்கூட்டங்கள் சென்னையைச் சுற்றி இருப்பதால், இன்று சாரல் மழை மட்டுமே இருக்கும்.
டெல்டா மாவட்டங்களில் மட்டுமே கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.