அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்

putin-14

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற  இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின்.

இந்திய ராணுவப் பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை ரூ.37 ஆயிரம் கோடிக்கு (500 கோடி டாலர்கள்) கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் முன்னிலையில் அதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.

ரஷியாவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில், அதையும் மீறி  இத்தகைய ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நிகழ்வாக மாறியுள்ளது.

இதற்கு அமெரிக்கா எத்தகைய  எதிர்வினையை ஆற்றப் போகிறது? என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. இருப்பினும் இந்த விவகாரத்தால் அமெரிக்காவுடனான நட்புறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ள மத்திய அரசு, இதுதொடர்பாக அந்நாட்டுடன் பேசப் போவதாக ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

19-ஆவது இந்திய – ரஷிய வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக விளாதிமிர் புதின் தில்லிக்கு வியாழக்கிழமை வந்தார். அவருடன்  ரஷிய துணைப் பிரதமர் யூரி போரிசோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ், தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் டெனிஸ் மாண்டுரோவ் உள்ளிட்டோரும் வந்தனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி – புதின் இடையேயான சந்திப்பு தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சர்வதேச அளவில் பல விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

8 ஒப்பந்தங்கள் கையெழுத்து: அதன் பின்னர் 8 முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. அவற்றில் முக்கியமானது எஸ்-400 டிரையம்ப் ரக ஏவுகணை கொள்முதல் தொடர்பான உடன்படிக்கையாகும். அந்த வகை ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் இடையே பல மாதங்களாக நீடித்து வந்தது. அதில் அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி “ககன்யான்’ திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இந்தியாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பான உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அத்திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் ஃபெடரல் ஸ்பேஸ் ஏஜென்சி ஆஃப் ரஷியாவும் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இவை தவிர, ரயில்வே மேம்பாடு, பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்டவற்றிலும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே கையெழுத்தாகின. மேலும், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக கொச்சி கப்பல் கட்டும் தளம் மற்றும் ரஷியாவின் ஒருங்கிணைந்த கப்பல் கட்டுமான கழகத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பயங்கரவாத ஒழிப்பு: இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், பயங்கரவாதத்தை வேரறுப்பதன் முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தியிருந்தனர். எல்லை தாண்டி வந்து பிற நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றும் சம்பவங்கள் குறித்து அந்த அறிக்கை வாயிலாக கவலை தெரிவித்த இரு நாட்டு தலைவர்களும், அத்தகைய செயல்களை முற்றிலுமாக தடுப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடி கூறுகையில், “பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து அழித்தொழிக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் ஒரே நிலைப்பாடுதான் உள்ளது; அந்த இலக்கை நோக்கி இரு நாடுகளும் செயல்படும்” என்றார். அதே கருத்தை ரஷிய அதிபர் புதினும் வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவுக்கு அழைப்பு: இதனிடையே, தில்லியில் நடைபெற்ற இரு நாட்டு வர்த்தக மாநாட்டில் பேசிய மோடி, இந்தியாவில் ராணுவத் தளவாட தொழிற்பூங்காவை அமைக்குமாறு ரஷியாவுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கான வாய்ப்புகளும், சூழல்களும் இந்தியாவில் அதிக அளவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்கா கருத்து

இந்தியா  – ரஷியா இடையேயான ஒப்பந்தம் குறித்து  அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ரஷியாவின் தவறான செயல்பாடுகளால்தான் அந்நாட்டின் மீது அமெரிக்கா தடை விதித்தது. மாறாக, அதன் மூலம் தோழமை நாடுகளைப் பழிவாங்குவதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ரஷியாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதில் நட்பு நாடுகளுக்கு விலக்கு அளிப்பதற்கு சில வரையறைகள் உள்ளன.  எனவே, இந்த விவகாரத்தைப் பொருத்தவரை முன்கூட்டியே எந்த விதமான முடிவுக்கும் வரத் தேவையில்லை என்றார் அவர்.

“எஸ்-400 டிரையம்ப்’ ஏவுகணை சிறப்பம்சங்கள்

எஸ்-400 “டிரையம்ப்’  ஏவுகணையானது தரையிலிருந்து புறப்பட்டு விண்ணில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. எதிரி நாடுகளின் போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை இதன் மூலம் அழித்தொழிக்க முடியும். சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 72 எஸ்-400 ஏவுகணைகளை விண்ணில் செலுத்த முடியும். அதேபோன்று ஒரே நேரத்தில் அதன் மூலம் அதிகபட்சம் 36 இலக்குகளைத் தாக்க இயலும்.