UGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை? இணையதளத்தில் இன்று வெளியீடு
அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை?: யுஜிசி இணையதளத்தில் இன்று வெளியீடு

பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில், எந்தந்தப் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் உள்ளது என்ற விவரம் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது.
இந்த விவரங்களை யுஜிசி-யின் www.ugc.ac.in/deb என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடர்ந்து, திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.
புதிய நிபந்தனை: அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது. அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.
நான்கு பல்கலைக்கழகங்கள் மட்டுமே…: இதன் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றன.
அதனைத் தொடர்ந்து, தொலைநிலைப் படிப்புகளில் குறிப்பிட்ட அளவில் பேராசிரியர் நியமனம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற நிபந்தனையை யுஜிசி விதித்தது. இந்த நிபந்தனை காரணமாக சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த 51 படிப்புகளில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ள 48 படிப்புகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்தது. மேலும் பல பல்கலைக்கழகங்கள் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் எவை?: இந்த நிலையில், பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில் யுஜிசி அங்கீகாரம் பெற்றவை எவை என்ற விவரத்தை யுஜிசி புதன்கிழமை வெளியிட உள்ளது. இந்த விவரங்களை மாணவர்கள் யுஜிசி இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
30 நாள் அவகாசம்: கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன் பிறகு சேர்க்கை நடத்தப்படக் கூடாது என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற, உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.