Google தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமனம்

Google தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமனம்

 

உலகின் மிகப்பெரிய இணையதள சேவை தேடுதல் நிறுவனமான Google தலைமை செயல் அதிகாரியாக சென்னையில் பிறந்தவரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் கூகுள் க்ரோம் இயங்குதளத்தை சுந்தர் பி்ச்சை கவனித்து வந்தார்.
பல்வேறு பிரிவுகளில் Google சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை ஒருங்கிணைத்து Alphabet என்ற குழுமத்தை, கூகுளின் இணை நிறுவனர் லேரி பேஜ் அறிவித்துள்ளார். இந்த குழுமத்தின் ஒரு பிரிவான கூகுளுக்கு, 43 வயதாகும் சுந்தர் பிச்சை தலைமை அதிகாரியாக இருப்பார் என லேரி பேஜ் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் கூகுளின் பொறியியல் பிரிவுக்கான பொறுப்பேற்று சிறப்பான முன்னேற்றங்களை சுந்தர் பிச்சை ஏற்படுத்தியதாக லேரி பேஜ் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தவர். அதன் பிறகு ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்துக்கொள்கிறார். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின், சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.