03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.

தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி

       

லட்சத்தீவு பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழை கடந்த மே 29-ம் தேதி தொடங்கி, முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. இந்த 4 மாதங்களில் கர்நாடக, கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்தது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை காணப்பட்டது. தற்போது ஒவ்வொரு மாநிலமாகத் தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை 5-ம் தேதி அல்லது அதற்குப் பின் உருவாக இருப்பதாலும், வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்து தமிழ் இணையதளத்துக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

”வரும் 5-ம் தேதி அல்லது அதன்பின் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பது தமிழகத்தை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது.

அதன்பின் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மெல்ல நகர்ந்து தாழ்வு மண்டலமாக மாறி அது ஓமன் கடற்பகுதியை நோக்கிச் செல்லும். அது புயலாக மாறுமா என்று இப்போது கூற இயலாது. இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் பலத்த காற்றோ, அச்சப்படக்கூடிய அளவுக்கு பெருமழையோ இல்லை. அது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மழைதொடர்பாக வரும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.

ஒக்கி புயலுக்கும் இதற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால் கிழக்கில் இருந்து வரும் காற்று இழுக்கப்பட்டு அதிகமான மழை கிடைக்கும்.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு.

அதேநேரத்தில் தெற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்துசென்றபின், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால் அடுத்தடுத்து வரும் நாட்களும் மழை பெய்யும். நாளை முதல் தொடங்கி அடுத்து 5 நாட்கள் வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். வடமாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை இருக்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வைப் பொறுத்து மழை என்பது காலையிலோ அல்லது மாலையிலோ அல்லது இரவிலோ இருக்கக்கூடும்.

சில மாவட்டங்களில் காலையில் பெய்தால், சில மாவட்டங்களில் மாலையும், சில இடங்களில் இரவிலிருந்து அதிகாலை வரைகூட மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

சென்னையைப் பொறுத்தவரை இரவு நேரத்தில் தொடங்கி அதிகாலை நேரங்களில் மழை இருக்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வைப் பொறுத்து காலை நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.  அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் எந்தவிதத்திலும் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை. அவ்வாறு வரும் வதந்திகள் எதையும் நம்பவேண்டாம். அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழையை எதிர்பார்க்கலாம்”.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.