விண்டோஸூக்கு மாற்று காண்கிறது இந்தியா.

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஊடுருவி முடக்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக நவீன கணினி மேம்பாட்டு மையத்தால் “பாஸ்”(பாரத் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ்) என்ற அதிநவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம், கடந்த வாரம் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய சிஸ்டம், 3 மாதங்களாக பல்வேறு ஊடுருவலுக்கு உட்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணையதளங்களையும் ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகளை பாஸ் முறியடித்து, வெற்றி கண்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு புதிய கோடிங்களும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்னோடன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க உளவுத்துறையால் அதிகம் கண்காணிப்படும் நாடு இந்தியா என குறிப்பிட்டுள்ளார். இதனால் வெளிநாட்டினர் இந்திய அரசின் ரகசியங்களை உளவு பார்ப்பதை தடுப்பதற்காக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்திய தொழில்நுட்பத்தை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும்..

விண்டோசைப் போன்று இல்லாமல் எளிமையாக பயன்படுத்தும் வகையில் பாஸ் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அரசு இணையதளங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், தனிநபர்களின் ரகசியங்களையும் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.