விஏஓ, குரூப் 4, குரூப் 2-ஏ பணிகளில் 5,300 காலி இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி திட்டம்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

விஏஓ, குரூப் 4, குரூப் 2-ஏ பணிகளில் 5,300 காலி இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி திட்டம்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பணியில் 800 காலியிடங்கள், குரூப் 2-ஏ பணிகளில் (நேர் முகத்தேர்வு அல்லாத பணிகள்) 1,700 காலியிடங்கள், குரூப்-4 பணிகளில் 2,800 காலியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் தேர்வுகள் நடத்தப் படும். இதற்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிர மணியன் தெரிவித்தார்.

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட 8 மாவட்டங்களில் நேற்று நடந்தது. 91 மையங்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் தேர்வு எழுதினர்.

சென்னை தேர்வு மையங்களில் ஒன்றான எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பால சுப்பிரமணியன், தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் பாலசுப்பிர மணியன் கூறியதாவது:

உதவி பொறியாளர் தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும். கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பணியில் 800 காலியிடங்களையும், குரூப்-2-ஏ பணிகளில் (நேர்முகத்தேர்வு அல் லாத பணிகள்) 1,700 காலியிடங்களையும், குரூப்-4 பணிகளில் 2,800 காலியிடங்களையும் நிரப்புவதற்கு விரைவில் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்.

அண்மையில் நடந்து முடிந்த குரூப்-2 முதல்நிலைத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 791 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.