வடதமிழகம் நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழை நீடிக்கும்

வடதமிழகம் நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழை நீடிக்கும்

rains-life1

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியிலும் நீடிக்கிறது.

இது அடுத்த வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். டிசம்பர் 7-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

13 இடங்களில் கனமழை: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 13 இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. திங்கள்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நகர், புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சராசரியை விட 6 சதவீதம் கூடுதல்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்டோபர் 1 முதல் இதுவரை சராசரி மழை அளவை விட 6 சதவீதம் அதிகமாக பருவ மழைப் பெய்துள்ளது. அதாவது சராசரி அளவான 360 மி.மீ. மழையைக் கடந்து 390 மி.மீ. பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மீனவர்கள் வரும் 5-ஆம் தேதி முதல் தெற்கு ஆந்திரா, வடதமிழகத்தின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார் எஸ்.பாலச்சந்திரன்.

திருவாரூரில் 140 மி.மீ.: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, திருவாரூரில் 140 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 130 மி.மீ., வலங்கைமான், நன்னிலத்தில் தலா 120 மி.மீ., நாகையில் 110 மி.மீ., நீடாமங்கலம், கும்பகோணம், காரைக்காலில் தலா 90 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. திருத்துறைப்பூண்டி, ஆடுதுறை, திருவாடனையில் தலா 80 மி.மீ., திருவிடைமருதூரில் 70 மி.மீ., நாகை மாவட்டம் வேதாரண்யம், மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தலா 50 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.