ரத்தம் தேவைப்படுபவர்களை கொடையாளர்களுடன் இணைக்கிறது Facebook
ரத்தம் தேவைப்படுபவர்களை கொடையாளர்களுடன் இணைக்கிறது ஃபேஸ்புக்
ரத்த கொடையாளர்களை ரத்த வங்கிகள், ரத்தம் தேவைப்படும் மக்கள், மருத்துவமனைகளுடன் இணைக்கும் புதிய அம்சத்தை சமூக வலைதளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ளது.
இதன்படி அக்டோபர் 1 முதல், விருப்பமுள்ள இந்திய ஃபேஸ்புக் பயனாளிகள் ரத்த கொடையாளர்களாக மாறலாம். இதுகுறித்துப் பேசிய ஃபேஸ்புக் தயாரிப்பு மேலாளர் ஹேமா, ”பயனர்களிடம் இருந்து ரத்தப் பிரிவு, முன்னர் ரத்த தானம் செய்தவர்களா உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெறப்படும். தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்படும். அதே நேரத்தில் பதிவு செய்துள்ள கொடையாளர்கள் தாங்கள் எப்போது ரத்த தானம் செய்ய முடியும் என்பன குறித்த விவரங்களைத் தங்கள் டைம்லைனில் பகிர்ந்துகொள்ளலாம்.
இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் ரத்தம் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. ரத்தம் தேவைப்படும் அளவுக்கு, கிடைப்பதில்லை. இதனால் ரத்தம் தேவைப்படுபவர்களோ, அவர்களின் குடும்பமோ ரத்த கொடையாளர்களைத் தேடி அலைய வேண்டியதாகிறது. இதனால் நாங்கள் (ஃபேஸ்புக்) ரத்த வங்கிகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பொதுமக்களிடம் பேசினோம்.
இதையடுத்து இன்னும் சில வாரங்களில் எங்களிடம் பதிவு செய்யப்படும் ரத்த கொடையாளர்களை அவர்கள் தொடர்பு கொள்ள முடியும். தனிநபர்களோ, நிறுவனங்களோ தேவைப்படும் ரத்த பிரிவு, மருத்துவமனையின் பெயர், நேரம், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு சிறப்புப் பதிவை உருவாக்க முடியும்.
இதன்மூலம் ஃபேஸ்புக் அவருக்கு அருகிலுள்ள ரத்த கொடையாளர் குறித்த விவரத்தைத் தெரிவிக்கும். ரத்த தானம் செய்பவர், தேவைப்படுபவரை வாட்ஸ் அப், மெசஞ்சர் அல்லது போன் கால் வழியாக அணுகலாம். அதே நேரத்தில் கொடையாளரின் விவரங்களை அவராக அளிக்கும் வரை, ரத்தம் தேவைப்படுபவர் அறிய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.