மழை வெள்ளம்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை
மழை வெள்ளம்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை
சென்னை ராயப்பேட்டையில் வெள்ளம் சூழ்ந்த அவ்வை சண்முகம் சாலையை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விசுவநாதன்.
மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த 5 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
இதையடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரண உதவிகள் வழங்குவது, போக்குவரத்தைச் சீர்செய்தல் உள்ளிட்ட பணிகளில் போலீஸாரும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, கீழ்ப்பாக்கம் கெங்குரெட்டி சுரங்கப் பாதை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்ற அவர், அப்பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். அப்போது, பாதிப்புகள் குறித்து அவரிடம் பொது மக்கள் முறையிட்டனர். தேங்கியுள்ள நீரை அகற்ற விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். தேங்கியுள்ள மழைநீரை விரைவாக அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மீட்டுப் பணிகளில் சிறப்புப்பயிற்சி போலீஸார்: அதைத் தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குவது, போக்குவரத்தைச் சீர்செய்வது உள்ளிட்ட பணிகளில் அரசுத் துறை, மாநகராட்சி ஊழியர்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் அதிகாரிகளும், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மரங்கள் விழுந்தால் அகற்றுவது போன்ற பணிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற 400 பேர் காவல்துறையில் உள்ளனர். அவர்களும் தேவையான இடங்களில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்தைச் சீர்செய்யும் பணிகளில் போலீஸார் இரவு 2 மணி வரையில் ஈடுபட்டனர். மீண்டும் காலை 6 மணி முதலே தங்கள் பணியைத் தொடங்கி செய்து வருகின்றனர். இந்த மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஏ.கே.விஸ்வநாதன்.
கூடுதல் காவல் ஆணையர் எம்.சி.சாரங்கன், கிழக்கு மண்டல இணை ஆணையர் எஸ்.மனோகரன், தெற்கு போக்குவரத்து இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பி.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.