மதுபானக் கடையை அகற்றக்கோரி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழப்பு

செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் நின்று போராட்டம் நடத்தினார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர்.

இந்த குழுவின் மூலம் பள்ளிகள், கோயில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் மதுபான கடைகளை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறிய காந்தியவாதி சசிபெருமாள் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தீயணைப்பு படையினரின் முயற்சியால் மீட்கப்பட்ட காந்திவாதி சசிபெருமாள் 4 மணிநேரம் செல்போன் கோபுரத்தில் நின்று போராட்டம் நடத்தியதால் மிகவும் உடல்நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார்