புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற சென்னை மக்கள்: தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற சென்னை மக்கள்: தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு

சென்னையில் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்டியது. தேவாலயங்கள், கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலை மோதியது.

ஆங்கில புத்தாண்டு 2018 நேற்று பிறந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதலே ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் பட்டாசுகளை வெடித் தும் பலூன்களை பறக்கவிட்டும் உற்சாக குரல் எழுப்பினர். ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பலர் குழுக்களாக சேர்ந்து கேக் வெட்டினர். இனிப்புகளும் வழங்கப்பட்டன.

காந்தி சிலை அருகே பொதுமக்களோடு சேர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் காவல் ஆணையர் எம்.சி.சாரங்கன் உள்ளிட்டோர் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடினர். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் ஏராளமானோர் திரண்டிருந்து புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். நட்சத்திர ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கடற்கரை காமராஜர் சாலையில் இரவு 10 மணி முதலே வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. காமராஜர் சாலையுடன் இணையும் வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் வாகனங்கள் நுழையாதவாறு சாலை தடுப்புகளை போலீஸார் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மெரினாவில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 4 ஆளில்லா விமானங்கள் (யுஏவி) மூலம் கடற்கரைச் சாலை முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

பெண் போலீஸாரும் சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னை முழுவதும் 10 ஆயி ரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சாந்தோம் பேராலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தமி ழில் சிறப்பு ஆராதனையும் அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடந்தன. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், பிராட்வே புனித அந்தோணியார் ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் புத்தாண்டு வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடத்தப்பட்டன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர், முண்டகக்கண்ணி அம்மன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி முருகன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி உட்பட பல கோயில்களிலும் நேற்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உட்பட சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் புத்தாண்டை கொண்டாட சுற்றுலாத் தலங்களுக்கு வந்திருந்தனர்.