பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

10RS

நாட்டில் இப்போது புழக்கத்தில் உள்ள 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கதுதான் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டின் பல இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் 10 ரூபாய் நாணயங்களைப் பெற மறுத்து வருகின்றனர். நாணயங்களைக் கையாளுவதில் உள்ள சிரமம், போலி நாணயமாக இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக அதனை வாங்க மறுப்பதாகத் தெரிகிறது. இதனால், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பதுபோன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி 14 வகையான 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் நாட்டின் சமூக, கலாசார பெருமை, தலைவர்களை நினைவு கூரும் வகையில் இந்த நாணயங்கள் வெளியாயின. இவை அனைத்துமே சட்டப்படி செல்லத்தக்கவைதான்.

சில இடங்களில் வர்த்தகர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த நாணயங்கள் மீதான உண்மைத்தன்மை மீது அவர்களுக்கு சந்தேகம் உள்ளதாகத் தெரிகிறது. அரசு சார்பில் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்துமே செல்லத்தக்கவைதான். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் 10 ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.