நள்ளிரவைக் கடந்தும் தொடர்கிறது இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்!

நள்ளிரவைக் கடந்தும் தொடர்கிறது இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்!

 ம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக்கோரி தமிழக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், தற்போது தங்கள் போராட்டத்தை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், நள்ளிரவு நேரத்தைக் கடந்தும் தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். அவர்களைச் சந்திக்க காவல்துறையினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. போராட்டக்களத்தில் இருந்து வெளியே வந்த, இடைநிலை ஆசிரியர்கள் சங்க விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் நம்மிடம் பேசினார். “2009-ம் ஆண்டு ஜூன் மாதம் நாங்கள் பணிக்குச் சேர்ந்தோம். அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவினால் பயன்பெற்றனர். ஏழாவது ஊதியக்குழுவைச் சேர்ந்த எங்களுக்கு, அவர்களைவிட 14 – 20 ஆயிரம் வரை குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. இரண்டு தரப்பினருக்கும் ஒரே வேலை மற்றும் ஒரே கல்வித் தகுதிதான். ஆனால், ஊதியத்தில் மட்டும் பெரிய முரண்பாடு உள்ளது.

சம வேலைக்குச் சம ஊதியம் என்பது ஒன்றுதான் எங்கள் கோரிக்கை. எங்களின் நியாயமான கோரிக்கைக்காக இதுவரை நிறையவே போராடியிருக்கிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனவே, சுமார் எட்டாயிரம் ஆசிரியர்கள் சேர்ந்து தங்கள் குடும்பத்தினருடன் இன்று சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களைக் கைது செய்த போலீஸார், ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொண்டுவந்து வைத்தனர். சில மணிநேரத்தில் எங்களைக் காவல்துறையினர் விடுவித்துவிட்டனர். ஆனால், எங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் எனத் தொடர்ந்து உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

சுமார் நான்காயிரம் பெண் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் தற்போது வரை போராடிவருகின்றனர். இதுவரை கல்வித்துறையைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் எங்களை வந்து சந்திக்கவில்லை. அதனால், நள்ளிரவைத் தாண்டியும் எங்கள் போராட்டம் தொடர்கிறது. எங்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறும், நாங்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று அவரவர் ஊர்களுக்குச் செல்ல வாகன வசதி செய்துகொடுக்கிறோம் எனவும் போலீஸார் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால், தற்போதுவரை எங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம்” என்றார், பிரபாகர்.