தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய பந்த்: ஆட்டோ,டாக்சி ஓடாது!
தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய பந்த்: ஆட்டோ,டாக்சி ஓடாது!
புதுடெல்லி: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடுதழுவிய பொது வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்தியா முழுவதும் 10 தொழிற் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 15 கோடி பேர் இதில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசியைக் கட்டுப்படுத் துவது, பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார் மயமாக்கம் மற்றும் அரசுத் துறை பங்குகளை விற்பதைக் கைவிடுவது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 12 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடுதழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
இதையடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் கடந்த மாத தொடக்கத்தில் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நாடுதழுவிய பொது வேலை நிறுத்தம் இன்று(புதன்) நடத்தப்படுகிறது.
அகில இந்திய அளவில் உள்ள 10 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த தொழிற்சங்கங்களில் அரசு, தனியார் நிறுவனங்கள், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பல துறைகளை சேர்ந்த சுமார் 15 கோடி பேர் உறுப்பி னர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்பதால் போக்குவரத்து, மின்சாரம், எரிவாயு, எண்ணெய் விநியோகம் போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கூறி பாஜக ஆதரவு சங்கமான பிஎம்எஸ், இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி ஆகியவை வேலைநிறுத்தத்தில் இருந்து விலகியுள்ளன.
பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் தேசிய அளவில் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 45 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். மேலும் 20 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் தபால், வருமானவரி, கல்பாக்கம் அணுமின் நிலையம், மத்திய சுகாதார நிறுவனம், சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் என 45 அரசு அலுவலகங்களை சேர்ந்த 1.5 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தமிழகம் முழுவதும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸி, கால் டாக்ஸி ஓடாது என அறிவிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் அதிமுக தொழிற் சங்கம் தவிர மற்ற சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற் கின்றன. இதனால், பேருந்து போக்கு வரத்து சேவை பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது