தமிழ்நாடு வெதர்மேன் பதிவு: தென் மாவட்டங்களில் கனமழை; சென்னையில் அவ்வப்போது மழை
3 வது பருவநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவு: தென் மாவட்டங்களில் கனமழை; சென்னையில் அவ்வப்போது மழை
வடகிழக்கு பருவ மழையின் மூன்றாவது பருவ நிலை துவங்கியுள்ளது. இது அரபி கடல் நோக்கி நகர்வதால் தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழையும் சென்னையில் விட்டு விட்டும் மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர் மேன் பதிவு செய்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை குறித்து தி தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் இருந்து:
வடகிழக்கு பருவமழையின் முதல் மற்றும் இரண்டாவது காற்றழுத்த தாழ்வு நிலையில் முதலாவது காற்றழுத்த தாழ்வுநிலையில் சென்னையின் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கும், டெல்டா பகுதிகளுக்கும் நல்ல மழை கிடைத்தது. தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவுக்கு மழை ஏதும் இந்த பருவமழையில் இப்போதுவரை இல்லை. இப்போதும் அங்கு வறட்சிநிலைதான் நீடிக்கிறது.
3-வது காற்றழுத்த தாழ்வுநிலை
வடகிழக்குப்பருவமழையின் 3-வது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. கடந்த இரு முறை இருந்ததைப்போல் இல்லாமல், இந்த முறை வடதமிழக கடற்கரைக்கு சற்று தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை இருக்கிறது. அதாவது சரியாகச் சொல்லவேண்டுமானால், இலங்கையின் கிழக்கே இருப்பதால், இது இலங்கை வழியாக அரபிக்கடலுக்குள் சென்றுவிடும். ஆதலால், தென்தமிழகத்தில் மேகக்கூட்டமும் அதனால் மழையும் இருக்கும். 28-ந்தேதிக்கு பின், காற்றழுத் தாழ்வு நிலை அரேபியக் கடலுக்குள் செல்லும்.
தென் தமிழகத்தின் 2 நாட்களுக்கு கனமழை
இந்த வடகிழக்கு பருவமழை சீசனில் முதல்முறையாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு முறையேனும் கனமழை பெய்யும். நாளை முதல் இந்த மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கலாம். ஒரு முறையேனும் கனமழை பெய்யும்.
மாஞ்சோலை, பாபநாசம் அணை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும். திருநெல்வேலியிலும் மிக கனமழை இருக்கும். விருதுநகர், மதுரை, டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் மழை இருக்கும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவுக்கு வழியாக அரபிக்கடலுக்குள் செல்லும். ஆதலால், மேற்கு மாவட்டங்களான கோவை, குறிப்பாக நீலகிரி, குன்னூர் பகுதிகள், அருகே இருக்கும் மாவட்டங்களில் ஒருநாள் நல்ல மழை காத்திருக்கிறது. இந்த 3-வது காற்றழுத்த தாழ்வுநிலை தென் தமிழகம் முழுமைக்கும் நல்ல மழையை கொடுக்க சாதகமாக இருக்கிறது.
சென்னையில் கனமழை இல்லை….
சென்னையைப் பொருத்தவரை மிதமான மழையே இருக்கும். புறநகர்பகுதிகளஆன காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையில் இருந்து கிழக்கில் இருந்து ஈரப்பதக் காற்றுவீசும். பெரும்பாலான அடர்த்தியான மேகக்கூட்டங்கள் கடந்துவிட்டதால், பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பில்லை.
அடுத்த 3 நாட்கள் சென்னையில் மிதமான மழையோடு காலநிலை ரம்மியமாக இருக்கும். அவ்வப்போது திடீர்மழையும், சிறு தூறலும் போடக்கூடும். சென்னையில் 26,27,28 ஆகிய தேதிகளில் இடைவெளி விட்டு, அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. ஆதலால், ரெயில்கோட் அல்லது குடை போன்றவற்றை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
4-வது காற்றழுத்த தாழ்வுநிலையா? இருக்கிறது.. ஆனால், இப்போது அது குறித்து பேசத் தேவையில்லை…..
இந்த 3-வது காற்றழுத்த தாழ்வுநிலை அரபிக்கடலில் கலந்தபின், நம்முடைய எம்.ஜே.ஓ. அடிப்படையிலான முறை உருவாக்கம் பெறும். ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி அல்லது டிசம்பர் முதல்வாரத்தில் புயல்கூட உருவாக வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்னும் முடிந்துவிடவில்லை. எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். டிசம்பர் முதல் வாரத்தில் எம்.ஜே.ஓ. வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுநிலையை உருவாக்குவது குறித்து இன்னும் தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் முன் அதுகுறித்து பேச வேண்டாம். இப்போதுள்ள 3-வது காற்றழுத்த தாழ்வுநிலை நகர்ந்து செல்லட்டும், வறட்சியால் தவிக்கும் நமது தென் மாவட்டங்களில் ஓரளவு மழை கிடைக்கட்டும்.
சென்னையில் அவ்வப்போது, இடைவெளிவிட்டு சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும். இதே போன்றே அடுத்த 3 நாட்களுக்கும் தொடரும். டெல்டா மாவட்டங்களிலும் மழை இருக்கும்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் நல்ல மழை
கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளான உத்தண்டி, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், கோவளம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை இல்லாவிட்டாலும்கூட, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் எதிர்பாராதவிதமாக நல்லமழை பெய்துவருவது சிறப்பு.
நான் பதிவிட்டுள்ள ரேடார் புகைப்படத்தைப் பார்த்தால், சிறிய அளவிலான மேகக்கூட்டங்கள் அதிகமான திரண்டு, சென்னையை நோக்கி வருவது தெரியும். ஆதலால், சென்னையில் இடைவெளிவிட்டு, அவ்வப்போது மழை பெய்யும். சில நேரங்களில் பெய்யும் மழை கனமழையாகவும் இருக்கலாம்.
கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் பெய்த கனமழையைப் போல் சென்னை நகர்புறங்களிலும் ஒரிருமுறை கனமழை பெய்யக்கூடும். ஆனால், வெள்ளம் வரும் அளவுக்கு மிக கனமழையாக இருக்காது.
சென்னையில் தற்போது, ஊட்டி போன்ற குளுமையாக நிலவும் காலநிலையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். தமிழகத்தின் தென் மாவட்டகளுக்கு இன்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை வழியாக கன்னியாகுமரி கடற்கரைப்பகுதி கடலில் செல்வதால், தென் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழைக்கு இந்த நேரத்தில் வாய்ப்பு உண்டு.