தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

tngovernor

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை வெளியிட்டார். புரோஹித் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வந்து ஆளுநர் பொறுப்பை ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிகார் மாநில ஆளுநராக மூத்த பா.ஜ.க. தலைவர் சத்யபால் மாலிக், அஸ்ஸாம் ஆளுநராக ஜெகதீஷ் முகி, மேகாலயா மாநில ஆளுநராக பிகார் சட்டமேலவை முன்னாள் உறுப்பினர் கங்கா பிரசாத், அருணாசலப் பிரதேச ஆளுநராக பி.டி. மிஸ்ரா, அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநராக ஓய்வுபெற்ற அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த கே. ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அவருக்குப் பதிலாக, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். அவர் ஓராண்டுக்கும் மேலாக பொறுப்பு ஆளுநராகவே தொடர்ந்து வந்தார்.

முதல்வர் ஜெயலலிதா மரணம், அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் நிலைமைகள் காரணமாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன. இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து…:

பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர். 1977-ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இருந்து வருகிறார். 1978-ஆம் ஆண்டு நாகபுரி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின், 1980-இல் நாகபுரி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
கடந்த 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நாகபுரி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ராணுவ அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். 1996-ஆம் ஆண்டு மீண்டும் மக்களவை உறுப்பினரான புரோஹித், உள்துறை, ராணுவம், பொதுத் துறை குழுக்களின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
தீவிர அரசியல்வாதியாக இருந்த போதும் பத்திரிகையாளராகவும் பரிணமித்தவர் புரோஹித். நாகபுரி, ஜபல்பூர், போபால் போன்ற இடங்களில் இருந்து வெளிவரும் பத்திரிகையான “தி ஹிதவாடா’ பத்திரிகையின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதனைச் சிறப்பான முறையில் வெளிக் கொண்டு வந்தார். நாகபுரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அந்தப் பத்திரிகை, புரோஹித் தலைமைப் பொறுப்பை ஏற்ற காலத்தில் மத்திய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முன்னணி பத்திரிகையாக விளங்கியது.

தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராக புரோஹித் பொறுப்பு வகித்து வந்தார். மக்களவை உறுப்பினராக அவர் இரண்டு முறை இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும், ஒரு முறை பாஜக சார்பிலும் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வாழ்த்து: தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள புரோஹித்துக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பன்வாரிலால் புரோஹித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கூறியதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.