டெல்லி அரசின் துப்புறவுப் பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி

டெல்லி அரசின் துப்புறவுப் பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி

புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் பணியாற்றும் துப்புறவு பணியாளர் மற்றும் தோட்டக்காரர்கள் பயிற்சி பெற வேண்டி சிங்கப்பூர், சியோல் மற்றும் டோக்கியோ ஆகிய வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். இந்த வாய்ப்பு, நாட்டிலேயே முதன் முறையாக தலைநகரின் கடைநிலைப் பணியாளர்களுக்கு கிடைக்க உள்ளது.

நாட்டின் மாநிலங்களில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் முதன் முறையாக தன் பணியாளர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சியில் புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் இறங்கியுள்ளது. இதற்காக, தம் 7 துப்புறவுப் பணியாளர்கள், 7 தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் 3 சாலை பொறியாளர்களை சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு அனுப்ப உள்ளது. இவர்கள் அங்குள்ள துப்புறவு பணி, தோட்ட பராமரிப்பு மற்றும் சாலை அமைத்தல் மீது பயிற்சி பெற்று வருவார்கள். இந்த பயிற்சி, நாட்டின் தலைநகரான டெல்லியை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறுகையில், ‘அங்கு கிடைக்க இருக்கும் 7 நாள் பயிற்சிக்காக மொத்தம் 17 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்கு சென்று தாம் பணி செய்யும் துறைகளில் சிறந்த பயிற்சி பெற்று திரும்புவார்கள். இந்த மூன்று நாடுகளின் நகரங்கள் தூய்மை, அழகு மற்றும் தொழில் நுட்பங்களில் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளவை ஆகும்.’ எனக் கூறுகின்றனர்.

இதுபோல், வெளிநாடுகளில் பயிற்சி என்பது நம் நாட்டில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற சிவில் சர்விஸ் அதிகாரிகளுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது. அரசு நிர்வாகங்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லை எனக் கருதப்படுகிறது.

தலைநகரை பராமரிப்பதற்காக இருக்கும் புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரஷன் தற்போது வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்றிலும் மேயர்களாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் பதவி பெற்று நிர்வாகித்து வருகின்றனர். இம் மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலின் போது அதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும், டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக்குவதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்திருந்தனர்