டெங்கு: அரசு மருத்துவமனைகளில் 10,332 பேர் அனுமதி: சுகாதாரத் துறை செயலர்
டெங்கு: அரசு மருத்துவமனைகளில் 10,332 பேர் அனுமதி: சுகாதாரத் துறை செயலர்

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 10,332 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை டெங்கு காய்ச்சலால் 35 பேரும், மர்மக் காய்ச்சலால் 85 பேரும் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவோரிடம் நோயின் தன்மை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தற்போது காய்ச்சல் காரணமாக 131 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் டெங்கு அறிகுறியோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் குணப்படுத்தக்கூடிய நோயாகும். ரத்தப் பரிசோதனையின் போது ஏற்படும் ரத்தக் கசிவின் மூலம் ஏற்படும் உயிரிழப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதேபோல், திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியிலிருந்து காய்ச்சல் காரணமாக வந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது, துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்த அளவே இருப்பதால் சுத்தம் செய்ய காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் உடனே துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நல்ல தண்ணீரில்தான் இந்த டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பொதுமக்கள் தங்கள் வீட்டின் பின்புறம் தண்ணீர் பிடித்து வைத்துள்ள பாத்திரங்களை கட்டாயம் மூடி வைக்க வேண்டும். தெருக்களில் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தற்போது, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு 10 ஆயிரத்து 332 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் டெங்கு காய்ச்சலால் 35 பேரும், மர்மக் காய்ச்சல் காரணமாக 85 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் போலியோ நோயைக் கட்டுப்படுத்த 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு தடுப்பது போல், இந்த டெங்குவையும் தடுக்க தடுப்பூசி அளிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
இந்த ஆண்டு 35 கோடி ரூபாய் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 20 படுக்கைகள் கொண்ட தாய் சேய் நல விடுதி அமைக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது, திருத்தணி அரசு மருத்துவமனையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
பின்னர், மணவாளநகர் பகுதிக்குச் சென்று குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் ச.சா.குமார், நகராட்சி ஆணையர் செந்தில்குமார், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.