சில மணி நேர மழைக்கே வெள்ளத்திடம் சரணாகதி அடைந்த வடசென்னை!
01/11/2017: சில மணி நேர மழைக்கே வெள்ளத்திடம் சரணாகதி அடைந்த வடசென்னை!
சென்னை: வடகிழக்குப் பருவ மழையில் வெள்ளம் வருவது இயற்கைதான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக இரண்டாவது நாளிலேயேவா? என்கிறார்கள் வட சென்னைவாசிகள்.
அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. அக்டோபர் 29ம் தேதி அதாவது சென்னை உட்பட தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது… மறுநாள் திங்கட்கிழமை காலையில் சென்னையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.. அலுவலகம் செல்வோர் அவதி, முக்கியச் சாலைகள் மட்டுமல்ல, சின்ன சின்னத் தெருக்களில் கூட போக்குவரத்து நெரிசல்.. சாலைகளில் வெள்ளம் என தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் தலைப்புகள் கொட்டித் தீர்த்தன.
அதிலும் குறிப்பாக வட சென்னை.. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பெய்த மழை காரணமாக வடசென்னையில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
கணேசபுரம் சுரங்கப் பாதை ஒவ்வொரு ஆண்டும் மழையால் நிரம்புவது வழக்கம். இந்த ஆண்டும் அதே நிலைதான். வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் இருந்து அலுவலகம் செல்வோர், மாற்றுப் பாதைகளைத் தேடினர். அங்கு மட்டும் என்ன அதே நிலைதான்.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கப் போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தேதி குறித்தப் பிறகும் கூட, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது குறித்து விவரிக்கிறார், “நள்ளிரவில் நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, எங்கள் ஆடைகள் நனைவது போல் இருந்தது. எழுந்து விளக்கைப் போட்ட போதுதான், வாசலில் இருந்து படிப்படியாக வெள்ள நீர் எங்கள் வீட்டுக்குள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாற்காலிகளிலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். விடிந்ததும், வீட்டுக்குள் இருந்து மழை நீரை வெளியேற்றினோம்” என்கிறார்.
ஒவ்வொரு மழையின் போதும் இந்த பிரச்னையை சந்திக்கிறோம். சென்னை மாநகராட்சி எங்கள் மீது பாராமுகமாகவே இருக்கிறது. நல்ல வேளை செவ்வாய்க்கிழமை காலையில் மழை நின்றுவிட்டது. இல்லையென்றால் எங்கள் நிலை அவ்வளவுதான் என்கிறார் அவர்.
சத்தியமூர்த்தி நகர் பகுதி முழுவதுமே வெள்ளம் மற்றும் கழிவுநீரால் சூழப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்குள்ளும் நீர் வந்துவிட்டது. கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்துக்கு முக்கியமான பொருட்களை எல்லாம் ஏற்றினோம். திங்கட்கிழமை இரவு 3 மணி நேரம் பெய்த மழைக்கே எங்கள் பகுதிக்கு இந்த நிலை. நினைத்துப் பாருங்கள் நாள் முழுவதும் மழை பெய்தால் எங்கள் நிலை என்னவாகியிருக்கும் என்று கவலையோடு கேள்வி எழுப்புகிறார் மற்றொரு வடசென்னைவாசி.