காத்திருக்கும் ஆபத்து!

காத்திருக்கும் ஆபத்து!

நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் தெருவோர உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கும் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர்பவர்களுக்கும் அதிக முதலீடு இல்லாமல் தொடங்கக்கூடிய தொழிலாக தெருவோர உணவகங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன. தெருவோரத்தில் வாகனங்களை நிறுத்தியும், தள்ளு வண்டிகளிலும், நடைபாதைகளிலும் நடத்தப்படும் தற்காலிக உணவகங்கள் சாமானிய, நடுத்தர மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதால்தான் இந்த அளவுக்கு பெருகிவருகின்றன என்கிற உண்மையையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

சமீபத்தில் தெருவோர உணவகங்கள் குறித்து நாடாளுமன்றக் குழு ஒன்று உணவுப் பாதுகாப்பு குறித்த சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்திய உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் நாடாளுமன்றக் குழு கண்டனம் தெரிவித்திருக்கிறது. உணவுப் பாதுகாப்பு குறித்து கண்காணிக்க வேண்டிய ஆணையம், அது குறித்து முறையான விதிமுறைகளை வகுத்து எந்த அளவுக்கு தெருவோர உணவகங்களின் சுத்தத்தையும், தரத்தையும் பாதுகாக்கிறது என்பதை நாடாளுமன்றக் குழு சரியான நேரத்தில் தட்டிக் கேட்க முற்பட்டிருக்கிறது.
இந்திய உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையத்தைப் பொருத்தவரை, பெரிய உணவு விடுதிகளிலும், உணவுத் தயாரிப்பு நிறுவனங்களிலும் சோதனைகளை நடத்தி வருகிறதே தவிர, அனைத்துத் தளத்திலும் அதன் செயல்பாட்டை உறுதிப்படுத்தவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உணவுக் கலப்படம், தவறான தகவல்களுடன் உணவுப் பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்ட குற்றங்களில் உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையம் நடத்தியிருக்கும் சோதனைகளும், பதிவு செய்திருக்கும் வழக்குகளும், பெற்றுத் தந்திருக்கும் தண்டனைகளும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில்தான் இருக்கின்றன.

2016-17 நிதியாண்டில் ஒட்டுமொத்த இந்தியாவில் ஆணையம் சோதனைக்காக எடுத்திருக்கும் மாதிரிகளின் எண்ணிக்கை வெறும் 18,325. இந்த மாதிரிகள் உணவுக் கலப்படத்துக்காகவும், தவறான தகவல்களுடன் விற்பனை செய்யப்பட்டதற்காகவும் ஆணையத்தால் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவை. அவற்றில் 13,080 மாதிரிகளில் மட்டும்தான் குற்றம் அறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு தொடர்ந்தபோது அவற்றில் 1,605 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றிலும்கூட பெரும்பாலானவை வெறும் பிழையுடன் தண்டிக்கப்பட்டவை.

உணவுக் கலப்படத்துக்காக ஆணையத்தால் எடுக்கப்பட்ட மாதிரிகள் மிக மிக குறைவானவை. அதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு கூறியிருக்கிறது. இதற்கு ஆணையம் வழங்கும் காரணங்களான போதுமான விதிமுறைகள் இல்லை, ஊழியர்கள் இல்லை உள்ளிட்டவை ஏற்புடையதாக இல்லை.

உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டாலோ, விற்கப்பட்டாலோ, இலவசமாக வழங்கப்பட்டாலோ எதுவாக இருந்தாலும் அவற்றின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது அடிப்படை அவசியம். இப்போது உணவுத் துறை என்பது இந்தியாவின் மிகப்பெரிய துறையாக மாறியிருக்கும் நிலையில், இது குறித்த தீவிரமான சிந்தனையும், கடுமையான கட்டுப்பாடுகளும் தேவை. நாடாளுமன்றக் குழு முன்வைத்திருக்கும் சில ஆலோசனைகள் உடனடியாக அரசாலும் ஆணையத்தாலும் கவனத்தில் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாக வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய அளவிலிருந்து தொடங்கி எல்லா நிலைகளிலும் உணவுப் பொருள்களுக்கான சோதனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது நாடாளுமன்றக் குழுவின் மிக முக்கியமான பரிந்துரை. நடமாடும் சோதனை மையங்கள் மாவட்ட அளவில் ஏற்படுத்தப்படுவதை உடனடியாக உறுதிப்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாதிரிக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவுப் பொருள்கள் குறித்த சோதனையின் முடிவுகள் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு வலியுறுத்துகிறது.

உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையம், தூய்மையான தெரு உணவுத் திட்டம் என்கிற ஒரு முயற்சியை தில்லியிலும் கோவாவிலும் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம், தில்லியில் 23,000 தெருவோர உணவகங்களிலும், கோவாவில் 700 தெருவோர உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்பு குறித்தும், சுத்தம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல உணவுப் பொருள்களை அகற்றுதல், இருக்கை வசதிகளை உறுதிப்படுத்துதல், கையில் உறையுடன் பரிமாறுதல் உள்ளிட்ட பல்வேறு இன்றியமையாத தேவைகள் இந்தத் திட்டத்தின் மூலம் அறிவுறுத்தப்படுகின்றன. இதை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த போதுமான வசதியோ, நிதி ஆதாரமோ இல்லை என்கிற ஆணையத்தின் பதிலை நாடாளுமன்றக் குழு அரசிடம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

லட்சக்கணக்கான மக்கள் தெருவோரக் கடைகளையும் உணவகங்களையும் நாடத் தொடங்கிவிட்டிருக்கும் நிலையில், அந்த உணவகங்களில் பணியாற்றுவோருக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவது அவசியம். பொது சுகாதாரத்தின் அடிப்படை உணவுப் பாதுகாப்பு என்பதை உள்ளாட்சி அமைப்புகளும், உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையமும் உணர்ந்து செயல்பட்டால் மட்டும் போதாது. உணவகங்களும் அவற்றை நாடும் பொதுமக்களும் அதை உணர்ந்தாக வேண்டும். தரநிர்ணயமும் சுத்தமும் இல்லாமல் தெருவோர உணவகங்கள் முறைப்படுத்தப்படாமல் வரைமுறையின்றிப் பெருகுமேயானால், காலரா, மலேரியா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்களை நாமே வருந்தி அழைப்பதாக ஆகிவிடும்.