கனமழை எதிரொலி: 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

கனமழை எதிரொலி: 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

rain_leave

சென்னை: கனமழை எதிரொலியாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று திங்கள்கிழமை (நவ.6) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில், மேலும் 2 நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வடகிழக்கு பருவ மழையின் தீவிமடைந்ததால், செவ்வாய்கிழமை முதல் பல மாவட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. எனவே, இன்று திங்கள்கிழமை பள்ளிகள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அதிகாலையில் இருந்தே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதையடுத்து
சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், திருவாரூர், நாகபட்டினம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் திங்கள்கிழமை (நவ.6) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அரக்கோணம் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சற்று வலு குறைந்து, காற்றழுத்தத் தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இது தற்போது, தென்மேற்கு வங்கக் கடலில் மன்னார் வளைகுடாவில் இருந்து, தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் வரை பரவியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். மீனவர்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசம்- 140; திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, நாகப்பட்டினம் 120; காரைக்கால்- 110; திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாங்குநேரி, கடலூர்- 90; பரங்கிப்பேட்டை, அம்பாசமுத்திரம், திருவாரூர்- 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.