கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்
04/11/2017:கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்

இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதை காட்டும் வரைபடம்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை தீவிரம்
தமிழகத்தில் கடந்த அக்.27-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகளவு மழை பதிவாகி வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் நிலவுகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும் ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலோர மாவட்டங்களில்…
அடுத்து வரும் 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிகக் கன மழையும் பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை, புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புண்டு.
கன மழைக்குக் காரணம் என்ன?
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலப் பகுதிக்கு வருவதற்கு குறைந்த அளவே வாய்ப்பிருந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் மெதுவாக அங்கிருந்து நகரத் தொடங்கியதால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
2 நாள்களுக்கு மழை நீடிக்கும்
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்னும் அந்தப் பகுதியில்தான் நிலை கொண்டிருப்பதால் வலுப் பெறுவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் ஈரப்பதம் தென் தமிழகத்தை நோக்கி வருகிறது. அதனையொட்டி ஏற்படக்கூடிய மழையானது இடம் மாறி மாறி பெய்து கொண்டிருக்கிறது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு தற்போதை நிலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.