ஒக்கி’ புயலால் 16 மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை: குமரி, நெல்லை, தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு

ஒக்கி’ புயலால் 16 மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை: குமரி, நெல்லை, தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு – 4 பேர் பலி; 20,000 மரங்கள், 950 மின்கம்பங்கள் சாய்ந்தன

நாகர்கோவிலில் நடுரோட்டில் விழுந்து கிடந்த மரம்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘ஒக்கி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி 16 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. சூறைக்காற்றால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், 950 மின்கம்பங்கள் சாய்ந்தன. 4 பேர் பலியாகினர். பல வழித்தடங்களில் போக்குவரத்து முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப் பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடலில் குமரி கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. குமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த புயலுக்கு ‘ஒக்கி’ (ockhi) என பெயரிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக நேற்று அதிகாலை 2 மணி முதல் மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

இரவும், பகலுமாக இடைவிடாது கடும் சத்தத்துடன் காற்று வீசியது. கடற்கரை கிராமங்களில் காற்றின் வேகத்தால் வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடற்கரையிலும், மீன்பிடி தளங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தூக்கி வீசப்பட்டன. மாவட்டத்தின் உட்பகுதியிலும் காற்றின் வேகத்தால் கடும் சேதம் ஏற்பட்டது.

மரங்கள் சாய்ந்தன

சூறைக்காற்றால் வடசேரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, ஈத்தாமொழி உட்பட மாவட்டம் முழுவதும் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல வீடுகளில் சுவர்களும், சுற்றுச்சுவர்களும் சரிந்து விழுந்தன.

மின்கம்பங்கள் விழுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. பெரும்பாலான தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல் இழந்ததால் செல்போன் சேவை முடங்கியது.

போக்குவரத்து முடங்கியது

வடசேரி பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, புத்தேரி, ஆட்சியர் அலுவலக பூங்கா உட்பட முக்கிய சாலைகள், முக்கிய பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததாலும், மின் இணைப்புகள் அறுந்து கிடந்ததாலும் போக்குவரத்து தடைபட்டது. மினி பேருந்துகள், ஆட்டோக்கள்கூட இயக்கப்படவில்லை.

‘ஒக்கி’ புயலின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், நாகர்கோவில் அருகே தோவாளையில் நிலைகுலைந்து ஆடிய தென்னை மரங்கள்.

நூற்றுக்கணக்கான லாரிகள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்திலுள்ள 12 பணிமனைகளிலும் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் மீண்டும் பணிமனைக்கே திருப்பி விடப்பட்டன.

20,000 மரங்கள்

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா, வடசேரி எஸ்.பி.ஐ வங்கி ஆகிய இடங்களில் இருந்த மரங்களும் முறிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை, ரப்பர் மற்றும் பல்வேறு மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததிலும், காற்றின் வேகத்தாலும் 950 மின்கம்பங்கள் வளைந்தும், முறிந்தும் போயின.

தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி நகர பகுதியில் 10 மின்கம்பங்களும், திருச்செந்தூர், உடன்குடி பகுதிகளில் மற்ற மின் கம்பங்களும் சரிந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் நேற்று மின் தடை ஏற்பட்டது. சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தன. மரங்களும் சாலையில் விழுந்து கிடந்தன.

நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியில் தாழ்வான பகுதியில் உள்ள 50 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இவற்றில் வசித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இவர்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் தலா 5 வீடுகள், தென் தாமரைக்குளத்தில் 3, அகஸ்தீஸ்வரத்தில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன.

4 பேர் பலி

கார்த்திகைவடலியில் வீட்டின் முன்பகுதியிலிருந்த தென்னை மரம் விழுந்து ராஜேந்திரன்(40), ஈத்தாமொழி குமரேசன்(55) ஆகியோரும், பளுகளில் வீடு இடிந்து அலெக்ஸாண்டர்(55) என்பவரும் பலியானார்கள். மண்டைக்காடு பகுதியிலும் ஒருவர் உயிரிழந் தார்.

திருமணங்கள் ஒத்திவைப்பு

முகூர்த்த நாளான நேற்று குமரி மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. ஆனால், தொடர் மழையின் காரணமாக திருமண வீட்டார் கடும் அவதிப்பட்டனர். உறவினர்கள் பாதி வழியில் சிக்கிக் கொண்டதால் விழாக்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. விருந்துக்கு தயார் செய்து வைத்திருந்த உணவு வீணானது. சிலர் திருமணங்கள் வேறு தேதிக்கு ஒத்திவைத்தனர்.