எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்: தளபதி பி.எஸ்.தனோவா
எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்: தளபதி பி.எஸ்.தனோவா
சிக்கிம் அருகே உள்ள டோக்கா லாம் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், மேற்கண்ட கருத்தை அவர் கூறியுள்ளார்.
இந்திய விமானப் படையின் நிறுவன நாள் விழா, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத், விமானப் படையின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பி.எஸ்.தனோவா பேசியதாவது:
எனது தலைமையில் இயங்கி வரும் விமானப் படையில் பணியாற்றும் அனைத்து வீரர்களும், நாட்டின் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் உறுதியைப் பெற்றிருக்கிறார்கள். மேலும், எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுப்பதற்கு முழுமையாகத் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
தற்போதைய புவியரசியல் சூழலில் நாங்கள் உடனடியாக, கூடிய விரைவிலேயே போரில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படலாம். அதற்காக, நாங்கள் எச்சரிக்கையுடனும், தயார் நிலையிலும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படைத் தளத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பிறகு, நாட்டில் உள்ள அனைத்து விமானப் படைத் தளங்களிலும், எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த ராணுவ வலிமையை மேம்படுத்துவதற்கு ராணுவம், கடற்படை, விமானப் படை என முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும், கூட்டாகத் திட்டமிடுதலும் அவசியமாகும். விமானப் படையில் பணிபுரியும் அனைத்து வீரர்களும் ஆகாயத்திலோ, நிலத்திலோ போரில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எந்த நேரத்தில் போரில் ஈடுபட வேண்டிய சூழல் வந்தாலும், உடனடியாகப் போரில் ஈடுபடுவதற்கான தயார் நிலையில் வீரர்கள் தங்களது தளவாடங்களுடன் இருக்க வேண்டும்.
நவீன தொழில்நுட்பத்துக்கு மாறும் வகையில், புதிய தளவாடங்களைக் கொள்முதல் செய்தல், ஏற்கெனவே உள்ள ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, “மிராஜ்-2000′, “மிக்-29′, “ஜாகுவார்’ உள்ளிட்ட போர் விமானங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில் 36 “ரஃபேல்’ ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதாலும், உள்நாட்டிலேயே போர் விமானங்களைத் தயாரிக்கும் பணி தொடங்குவதாலும், நமது ராணுவ வலிமை மேலும் அதிகரிக்கும்.
மத்திய அரசின் “இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே உயர் தொழில்நுட்பத்துடன் ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பதற்கு விமானப் படை முழு ஆதரவு அளிக்கிறது என்றார் அவர்.
கெளரவிப்பு: விமானப் படையில் திறம்பட பணியாற்றிய வீரர்களுக்கு வாயு சேனா பதக்கத்தை வழங்கி தனோவா கெளரவித்தார். விழாவில் விமானப் படையின் சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது.