இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு விடிய விடிய மக்கள் அஞ்சலி
விடிய விடிய மக்கள் அஞ்சலி
இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அப்துல் கலாமின் உடல் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே கிழக்காடு என்ற இடத்தில் இருந்து புதன்கிழமை இரவு 10 மணிக்கு முஸ்லிம் தெருவில் உள்ள கலாம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். வீட்டிற்குள் அவரது உறவினர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ராமேசுவரம் வந்திருந்தனர். இதனால் கலாமின் வீட்டிற்கு வெளியே ஏராளமான கூட்டம் கூடியது. இதையடுத்து அவரது வீட்டிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு வியாழக்கிழமை அதிகாலை வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். கலாமின் வீடு உள்ள முஸ்லிம் தெரு பகுதியில் இருந்து மேட்டுத்தெரு, வர்த்தகன் தெரு, கடைத்தெரு, திட்டக்குடி சந்திப்பு, நடுத்தெரு வழியாக ராமேசுவரம் நகர் காவல் நிலையம் வரை சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.