இந்தியாவில் 20 வயதை நிறைவு செய்தது இண்டர்நெட்!

இந்தியாவில் 20 வயதை நிறைவு செய்தது இண்டர்நெட்!

புதுடில்லி : ஆகஸ்ட் 15, 1995ல் இந்தியாவில் முதல் முறையாக துவங்கப்பட்ட இன்டர்நெட் சேவை, இந்த சுதந்திர தினத்தில்(ஆக.,15, 2015) தனது 20-வது வயதை நிறைவு செய்துள்ளது.

விதேஸ் சஞ்சார் நிகாம் லிமிடெட்(வி.எஸ்.என்.எல்.,) நிறுவனத்தால் 20 ஆண்டுகளுக்கு முன், சுதந்திர தினமான ஆக.,15 1995ல் இந்தியாவில் முதன் முதலில், இன்நெட் அறிமுகப்படுத்தப் பட்டது. கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படும் நோக்கில் அப்போது துவக்கப்பட்ட இன்டர்நெட், முக்கிய நகரங்களான டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 நகரங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்டர்நெட் துவக்கப்பட்ட போது, 250 மணிநேரத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவையின் வேகம் நொடிக்கு 9.6 கிலோபைட்ஸ் மட்டுமே. அப்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்த போதும், அடுத்த 6 மாத காலத்தில் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியது.

டிராயின் தற்போதைய கணக்குப்படி, இந்தியாவில் இன்டர்நெட் உயயோகிப்பவர்களின் எண்ணிக்கை, 30.235 கோடி. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கிலோபைட்ஸ் வேகத்திலிருந்து, தற்போது மெகாபைட்ஸ் வேகத்திற்கு உருவெடுத்துள்ள இன்டர்நெட், சாமானியர்களின் வாழ்க்கையிலும் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல.