ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (நவ. 27) தொடங்குகிறது. தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதைத் தடுக்க பகல், இரவு என 24 மணி நேரமும் துணை ராணுவப் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:-

அனுமதி பெறாத வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் நிறுத்தி வைக்கப்பட்டாலோ, காரணம் இல்லாமல் நுழைந்தாலோ அவை பறிமுதல் செய்யப்படும். அதற்கான செலவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். தேர்தல் முடிந்த பின்னர்தான் அந்த வாகனங்கள் திருப்பித் தரப்படும்.

தலைமைச் செயலருடன் விரைவில் ஆலோசனை: இரவு நேரத்தில் பணப் பட்டுவாடாவைத் தடுப்பதற்காக தொகுதி முழுவதும் தெருத் தெருவாக துணை ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். இந்தத் தேர்தல் தொடர்பாக தலைமைச் செயலாளருடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஏ.கே.ஜோதி விரைவில் ஆலோசனை நடத்துவார்.

கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு? வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் பிரசாரத்தை இனி காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த நேரத்தை மேலும் குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொகுதியில் அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே தேர்தல் பணிமனையை அரசியல் கட்சிகள் அமைத்துக் கொள்ள முடியும்.

டோக்கன் மூலம் பரிமாற்றத்துக்கு தடை: டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கடந்த முறை புகார்கள் வந்தன. எனவே, சென்னை மாவட்டம் முழுவதும் எந்தக் கடையிலும் டோக்கன் மூலம் பறிமாற்றங்கள் நடப்பதை தடை செய்திருக்கிறோம். அப்படி டோக்கன் முறையை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் காலகட்டத்தில் செயல்படுத்தினால், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.கே.நகர் தொகுதிக்குள் இருக்கும் மக்களின் வாகனங்களுக்காக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

வாகன நடமாட்டமும்… வாகன நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி, துணை ராணுவத்துக்கு தரப்படவுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக கொண்டு வரப்படும் வாகனங்களுக்கு தேர்தல் அதிகாரியின் முன்அனுமதி பெறப்பட வேண்டும். ஆன்லைன் மூலம் அனுமதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ராஜேஷ் லக்கானி.

சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த…: பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக போலீஸôர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிக்காக ஓரிரு நாள்களில் வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், அரசியல் கட்சியினர் சட்ட விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வழக்கத்தைவிட கூடுதலாக துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நான்கு முனைப் போட்டி?

இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரி வித்துள்ளன.

அதிமுக சார்பில் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளார். இந்தத் தேர்தலில் டிடிவி தினகரன் அணி சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். தற்போதைய நிலையில், அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், டிடிவி தினகரன் ஆகிய அணிகளுக்கு இடையே 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

போட்டியில்லை: இந்த இடைத் தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளன.