அரசியல்வாதிகள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

01/11/2017 : அரசியல்வாதிகள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
 supreme court

புதுதில்லி: நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்டு நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், ‘கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின்படி நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது 1,581 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்பொழுது அந்த வழக்குகளின் நிலை என்ன? அத்துடன் அதற்குப் பிறகு அரசியல்வாதிகள்மீது எதனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? அவற்றில் எத்தனை வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது? என்று கேள்விகளை எழுப்பினர்

அத்துடன் நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதன் மூலமே அந்த வழக்குகளின் விசாரணையை தீவிரப்படுத்த முடியும் என்று நீதின்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பான செயல் திட்டம் மற்றும் நிதி ஆதார ஒதுக்கீடு குறித்து திட்ட அறிக்கையினை ஆறு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் , வழக்கை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.