அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நாளை துவங்குகிறது கத்தரி.. பொதுமக்கள் அச்சம்

அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நாளை துவங்குகிறது கத்தரி.. பொதுமக்கள் அச்சம்

சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனினும் கோடையின் உச்சம் என கருதப்படும் கத்தரி வெயில் நாளை முதல் துவங்க உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் உட்பட சாலையில் செல்வோர் என அனைத்து தரப்பு மக்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவது மாவட்ட மக்கள், மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. நேற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சூறைக்காற்றுடன் மழை பெய்திருக்கிறது. அதேபோல மாநிலத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்திருக்கிறது.

எனினும் கோடையின் உச்சமென கருதப்படும் கத்தரிவெயில் நாளை முதல் துவங்க இருக்கிறது. பொதுவாக 24 நாட்கள் இந்த கத்தரி வெயில் இருக்கும் என்றும் இந்நேரங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படும்.

முன்பெல்லாம் கத்தரி வெயிலின்போதுதான் 100 டிகிரி வெப்பம் பதிவாகும். ஆனால் நடப்பு மாத துவக்கத்திலேயே 100 டிகிரியையும் தாண்டி வெயில் தீயாய் கொளுத்தி எடுத்துவிட்டது. இதில் வரப்போகும் கத்தரி வெயில் எப்படி இருக்குமோ, அதனை எப்படி எதிர்கொள்வதோ என மக்களுக்கு பீதி கிளம்பி உள்ளது.

இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் உள் மாவட்டங்களிலும், வேலூர்,சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் கரூர்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி வரை நீடிக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.